உடலில் விதவிதமான பல புதிய அறிகுறிகள்! கொரோனாவால் டாக்டர்கள் குழப்பம்!

கொரோனா பாதித்தவர்களுக்கு விதவிதமான பல புதிய அறிகுறிகள் தோன்றுகின்றன இதனால் டாக்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா பாதித்தவர்களுக்கு பல புதிய அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வறட்டு இருமல், காய்ச்சல், உடல்சோர்வு ஆகியவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகள். இவற்றுடன் உடல் வலி, சளி, தொண்டை வறட்சி போன்றவையும் கொரோனாவின் அறிகுறிகளாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு அறிதாக வயிற்றுப்போக்கும் ஏற்படுவதும் பின்னர் கண்டறியப்பட்டது.

தற்போது கொரோனா பெரும்பாலும் அறிகுறியே இல்லாமல் பரவுவதாக கூறப்படும் நிலையில், வாசனை இழப்பும் சுவை இழப்பும் கொரோனாவின் அடையாளங்களாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இத்தகைய நபர்கள் தொடக்கத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் பிற உயிர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும் என்றும் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். வாசனை மற்றும் சுவை இழப்புடன் இருமலும் மூச்சு விடுவதில் சிரமும் இருந்தால் அது நிச்சயம் கொரோனாவின் அடையாளம்தான் என்றும் இங்கிலாந்து அறிவியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பல அறிகுறிகள் தென்படுவதாக, ஐரோப்பிய அறிவியல் இதழ் தெரிவித்துள்ளது. இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவயதுபருவத்தினருக்கு, கால் பாதங்களில் அரிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

பாதத்தின் அடிப்பபுறத்திலும், பக்க வாட்டிலும் தோலின் நிறம் பழுப்பாக மாறுவதுடன் அரிப்பு ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியே என்று அந்த ஆய்விதழ் தெரிவித்துள்ளது. இதேபோன்று, கொரோனா பாதித்த சிலருக்கு கை மற்றும் விரல்களிலும் இதுபோன்ற அரிப்பு ஏற்படுவதை அந்த ஆய்விதழ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த புதிய அறிகுறிக்கு “கோவிட் பாதம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதேபோல் கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தின் மேல் பகுதியை பாதிக்கும்போது அதன் தொடர்ச்சியாக கண்கள் இளஞ்சிப்பாக மாறுவதும் கொரோனாவின் அறிகுறியே என்று கூறுகின்றனர் இங்கிலாந்து கண் டாக்டர்கள்.

ஸ்பெயின் டாக்டர்கள் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த ஓட்டம் தடை படுவதால் தோலின் நிறம் மாறுவதை கண்டுபிடித்துள்ளனர். 375 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 6 சதவீதம்பேருக்கு இந்த அறிகுறி தென்பட்டுள்ளது. இதன்படி, தோலின் நிறம் பழுப்பாகவோ அல்லது இளஞ்சிவப்பு பட்டையாக மாறுவதும் கொரோனாவின் அறிகுறியாக கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 214 பேருக்கு மேற்காள்ளப்பட்ட ஆய்வில் 36 சதவீதம் பேருக்கு நரம்பு மண்டல பாதிப்பால் ஏற்படும் மயக்கம் மற்றும் தலைவலி ஆகிய அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க் டாக்டர்கள் மேற்கொண்ட ஆய்வில், உடல் எரிச்சலும் கொரேனாவின் அறிகுறியாக கண்டறியப்பட்டுள்ளது. உடலில் எதிர்ப்பு சக்தி உருவாவதன் அளவின் அடிப்படையில் இந்த அறிகுறி தென்படும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அதிக அளவு எதிர்ப்பு சக்தி உருவாகும் பட்சத்தில் அது உடல் எரிச்சலை ஏற்படுத்தும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்…

By admin