ஊரடங்கு அறிவிப்புக்கு பின் வெளிமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர். போக்குவரத்து இல்லாததால் பலர் நடந்தே தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு பல தரப்பட்டவர்களும் தங்களால் ஆன உதவியை செய்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் சோனு சூட், ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே பல உதவிகளை செய்து வருகிறார். சொந்த செலவில் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

காம்களில் இருந்தவர்களுக்கு உணவு வழங்கினார். இந்நிலையில் கேரளாவில் சிக்கிய 150 வெளிமாநில பெண் தொழிலாளர்களை சொந்த செலவில் விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார் சோனு சூட். கேரளாவில் உள்ள துணி தொழிற்சாலையில் வேலை பார்த்த ஒடிசாவைச் சேர்ந்த 150 பெண்கள் ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டனர். தற்போது ஊருக்குச் செல்ல உடனடியாக ரயிலும் கிடைக்காத நிலையில் வேலையும் இல்லாமல் தவித்து வந்தனர்.

இதனை அறிந்த நடிகர் சோனு சூட் சொந்த செலவில் விமானம் ஏற்பாடு செய்து அவர்களை ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தார். கொச்சி விமான நிலையத்தில் புறப்பட்டு இன்று காலை 8 மணிக்கு ஒடிசா சென்றடைந்தது விமானம். இந்தியாவில் வெளிமாநில தொழிலாளர்கள் விமானத்தில் அழைத்துச்செல்லப்பட்டது இதுவே முதல்முறையாக இருக்கலாம் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து சோனு சூட்க்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

By admin