தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ. 8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ஆயிரம் என்ற அளவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 1,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில், 10 வயதுக்குட்பட்ட 33 குழந்தைகளுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 38,139 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். இதுவரை மொத்தம் 15,502 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா சோதனைக்கு தேவையான ரேபிட் கிட், பி.சி.ஆர். கருவிகள் பற்றாகுறையாக உள்ளதால் அரசு திணறி வருகிறது.

மறுபுறம் ரேபிட் கிட், பி.சி.ஆர். கருவிகள் உள்பட கொரோனா பரிசோதனை பொருட்களை, மாநிலங்கள் தன்னிச்சையாக கொள்முதல் செய்யவும், இறக்குமதி செய்யவும் வேண்டாம். மத்திய அரசே இறக்குமதி செய்து உரிய முறையில் வழங்கும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 பி.சி.ஆர். கருவிகளை தமிழக அரசுக்கு டாடா நிறுவனம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கொரோனா நிவாரண நிதியாக டாட்டா சன்ஸ் நிறுவனம் மற்றும் டாட்டா ட்ரஸ்ட் சார்பில் ரூ.1500 கோடி நிதியுதவி மத்திய அரசிடம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

By spydy