நம் தாத்த பாட்டி வாழ்ந்த வாழ்க்கை! எல்லாவகையான உணவுகளையும் தின்று பார்த்துவிட்டு நோயாளராகி இறுதியில் கம்பும் கேழ்வரகும் நீராகாரமுமே சிறந்தது என்று உணர்ந்தோம்…

எல்லாவகையான உலோகங்களிலும் பண்ட பாத்திரங்கள் செய்துவிட்டு இறுதியில் மண்சட்டியும் மண்பானையுமே பக்க விளைவுகளற்றவை என்ற பக்குவத்திற்கு வந்திருக்கிறோம்.

எல்லாவகையான சொகுசுந்துகளிலும் நோகாது பயணித்துவிட்டு இறுதியில் கைகால் வீசி நடப்பதுதான் உயிராற்றலைக் காப்பது என்று தெரிந்துகொண்டோம்.

எல்லாவகையான செருப்புகளையும் அணிந்து பார்த்துவிட்டு இறுதியில் வெறுங்காலோடு நடப்பதே சுரப்பிகளை ஊக்குவது என்று கண்டுபிடித்திருக்கிறோம்.

எல்லாவகையான ஈருருளிகளையும் வாங்கி ஓட்டிப் பார்த்துவிட்டு இறுதியில் மிதிவண்டிதான் உடலுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்றது என்று புரிந்துகொண்டோம்.

எல்லாவகையான செயற்கை உரங்களையும் வேதிப்பொருள்களையும் பயன்படுத்தி மண்ணைக் கெடுத்துவிட்டு இறுதியில் இலைதழை உரங்களும் பசுஞ்சாணமும் பஞ்சகவ்யமுமே உரமூட்டுவது என்று அறிந்துகொண்டோம்.

எல்லாவகையான அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திவிட்ட நாம் புதிதாய் ஒரு விதையை உருவாக்க முடியாது என்பதில் திகைக்கிறோம்.

இப்படி நிறையவே சொல்லலாம். இதில் இன்னும் ஒன்றேயொன்று மீதமிருக்கிறது.

எல்லாவகையான மாட மாளிகைகளையும் ஆடம்பரக் கட்டடங்களையும் கட்டுவதற்காக மலைகளையும் மரங்களையும் விளைநிலங்களையும் ஆற்றையும் காற்றையும் வரம்பின்றி அழித்த நாம், இனி நம் மூதாதையர் வாழ்ந்ததுபோல் கீற்றுவேய்ந்த கூரைவீடுகள்தாம் சிறப்பு என்ற இடத்திற்கும் அவற்றில் வசிப்பதற்கும் வந்தேயாகவேண்டும்.

எல்லாவற்றுக்கும் இறுதியில் இது நடக்கும் !

ஆதியை தேடி ….!

By admin