ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘திரெளபதி’. கூட்டு நிதி முறையில் மோகன் ஜி இயக்கி இந்த திரைப்படம், இந்த ஆண்டில் முதல் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. தியேட்டர்களில் மட்டுமே 18 நாட்கள் ஓடியுள்ள இந்த படம், தமிழ்நாட்டில் மட்டும் அந்த படம் 14.28 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் விநியோகஸ்தர்களுக்கு 3 மடங்கு லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து மோகன் ஜியின் அடுத்த பட அறிவிப்பை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் ஹீரோ ரிச்சர்ட்டை வைத்து ஒட்டுமொத்த திரெளபதி டீமுடன் மீண்டும் களம் இறங்க உள்ளதாக அறிவித்தார். அதற்கான கதை விவாதம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் திரெளபதி படத்தில் துணை நடிகராக நடித்த ரிஸ்வான் என்பவர் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பிளாக் மார்கெட் மூலமாக அதிக விலைக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது.

அதற்காக சரக்கை வாங்கி வந்து பிளாக்கில் விற்பனை செய்ததாக திரெளபதி படத்தில் நடித்த ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுவதை தடுப்பதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி எம்.ஜி.ஆர். நகர் பகுதிக்குட்பட்ட அண்ணா பிரதான சாலையில் உள்ள வீடு ஒன்றில் மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கிருந்த ரிஸ்வான் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்த 57 குவாட்டர் பாட்டில்கள், 12 பீர் பாட்டில்கள் மற்றும் 2300 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ரிஸ்வானிடம் நடத்தப்பட்ட சோதனை சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரதீப், சூளைமேட்டைச் சேர்ந்த தேவராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 189 குவாட்டர் பாட்டில்களும், 20 ஆயிரம் ரொக்கமும், கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

By Admins