ஊரடங்கில் இருந்து ஒரு நாள் விலக்கு கொடுக்க வேண்டும் என அனுமதி கேட்ட இளைஞருக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.  இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை நாட்டில் சமூகத்தொற்று பரவவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தாலும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு மேலும் நீடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் மோடி விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது. இதனிடையே ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களில் அடுத்தடுத்து ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டிலேயே அதிகம் பாதிப்பு உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதேபோன்று மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பில் 2 வது இடத்தில் உள்ள தமிழக அரசு பிரதமர் அறிவிப்பதை ஏற்று வழி நடப்போம் எனக் கூறி உள்ளார்.

இந்நிலையில் ஃபயாஸர்ஷி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’சார் தயவு செய்துஒரு நாள் மட்டும் ஊரடங்கில் இருந்து கேப் கொடுங்க ப்ளீஸ். என் மனைவி 9 மாத கர்ப்பினியாக இருக்கிறார். அவளுக்கு யாருமே இல்லை. நான் பக்கத்து  மாவட்டத்தில் மாட்டிக் கொண்டேன். இது முதல் பிரசவம். தனியா அவளால் பார்த்துக் கொள்ள முடியாது. 108க்கு போன் செய்தால் கூட கூடவே யாராவது இருக்கணும். பேருந்துக்கு விண்ணப்பித்தும் ரெஸ்பான்ஸ் இல்ல. இது மெடிக்கல் எமெர்ஜென்ஸி இல்லையா? எனக் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘’உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி. நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்’’ எனக் கூறியுள்ளார்.

By spydy