பல்லை அகற்றுதல் என்பது மிகவும் நுட்பமான செயல்முறையாகும். நோயாளி ஒருவரின் பல்லை அகற்றும் பல் மருத்துவர் மிகவும் கவனத்துடன் அதனை செயல்முறைபடுத்த வேண்டும். சிறிதாக ஏதேனும் கவனக்குறைவு ஏற்பட்டாலும் கூட அது நோயாளிக்கு காயங்களை ஏற்படுத்தும்.

இந்நிலையில், சேத் லுக்ஹார்ட் (Seth Lockhart) என்ற பல் மருத்துவர் ஒருவர் ஓவர் போர்டில் (HoverBoard) இருக்கும் போதே மயக்கத்தில் இருந்த நோயாளி ஒருவரின் பல்லை அகற்றும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், மருத்துவர் சேத், ஹோவர்போர்டில் இருந்து கொண்டே அங்குமிங்குமாக ஆடிக்கொண்டே மிகவும் சாதாரணமாக நோயாளியின் பல்லை அகற்றுகிறார். இதில் ஏதேனும் சிறிய அளவில் தவறு நிகழ்ந்தால் கூட நோயாளியின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

நோயாளிகளின் அனுமதியின்றி, மருத்துவ மோசடி மற்றும் ஆபத்தான பல் மருத்துவ முறையை கையாண்டதற்காக கடந்த திங்கட்கிழமை சேத் கைது செய்யப்பட்டு, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல, மொத்தம் 46 வகையிலான மோசடிகளில் சேத் இதுவரை ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, அந்த வீடியோவில் இருந்த நோயாளி வெரோனிகா (Veronica), மருத்துவர் ஹோவர் போர்டில் இருந்து பணிபுரியவோ, பல்லை அகற்றவோ நான் அனுமதியளிக்கவில்லை என சாட்சியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By Admins