டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ், தற்போது உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அசாதாரண சூழலை, கோவிட்-19 ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும் கோவிட்-19 வைரஸ், உலக வல்லரசான அமெரிக்காவையே ஆட்டி படைத்து வருகிறது.

அமெரிக்கா தவிர இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவை தற்போது அமலுக்கு கொண்டு வந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது
இந்தியாவை பொறுத்தவரை வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

நீண்ட நாட்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால், தொழிலாளர்கள் பலர் வேலையிழந்துள்ளனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில், பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அவை போதுமானதாக இல்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதை போல், ஆட்டோக்களும் தற்போது இயக்கப்படுவதில்லை. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வருமானம் இல்லாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இவர்களில் பலர் தினந்தோறும் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்துபவர்கள்.

இதனால் அரசு உதவி செய்ய வேண்டும் என ஆட்டோ டிரைவர்களின் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு பரிசீலனை செய்தது. இதன்பின் ஆட்டோ டிரைவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சொன்னதை போலவே ஆட்டோ டிரைவர்களின் வங்கி கணக்குகளில் தலா 5 ஆயிரம் ரூபாயை செலுத்தும் பணிகளை டெல்லி மாநில அரசு தற்போது தொடங்கியுள்ளது. 23 ஆயிரம் ஆட்டோ டிரைவர்களின் வங்கி கணக்குகளில் தற்போது தலா 5 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் இந்த தகவலை கூறியுள்ளார்.

By admin